
மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று ( மார்ச் 22 )கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது.
2026 ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதிகளை மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால், மக்கள்தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் அபாயம் ஏற்பட்டது.
மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் சிங் மான் மற்றும் முக்கியத் தலைவர்களும் தமிழ்நாடு வந்துள்ளனர்.
இவர்கள் தவிர, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் சலாம், கேரள காங்கிரஸ் தலைவர் பிரான்சிஸ் ஜார்ஜ் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் வந்துள்ள விருந்தினர்களுக்கு தமிழகத்தை மறக்க முடியாத அளவுக்கு நினைவு பரிசுகளை கொடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
அதன்படி,அவர்களுக் வழங்கப்படும் பரிசு பொருட்களில் பத்தமடை பாய், கோவில்பட்டி கடலை மிட்டாய் , நீலகிரி தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகிய தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் வழங்கப்படவுள்ளது. இந்த பரிசு பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.