பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் துணிக்கழிவுளை சுத்தம் செய்த தமிழ்நாடு காவல்துறை

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு சிறப்பு காவல்படை (TNUSRF) 9-ம் அணியை சேர்ந்த அதிகாரிகள், தாமிரபரணி ஆற்றின் கரைகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். கமாண்டன்ட் கார்த்திகேயன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் துணை கமாண்டன்ட் ஸ்ரீதேவி, ஆய்வாளர்கள் சுல்வரபிரசாத், பூதப்பாண்டியன், தமிழ்வாணன், ஒய்வுபெற்ற உதவி ஆய்வாளர் கூடலரசன், காவல்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பாபநாசம் தாமிரபரணியில் பலர் தங்களது துணிக்கழிவுகளை ஆற்றில் விடும் பழக்கம் உள்ளது. இது நீர் மாசுபாட்டிற்கு வழிவகுப்பதோடு, நீர்நிலைகளில் வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஆற்றில் விடப்படும் மலர்த்தூவல், துணிக்கழிவுகள், மற்றும் பிளாஸ்டிக் பைகளும் பெரும் அளவில்குவிந்து கிடக்கிறது. இது சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு காரணமாகிறது.

இந்த சூழ்நிலை தொடருமானால், நீர் மாசுபாடு கடுமையாகி விடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். இதை தடுக்கும் வகையில், தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9-ம் அணியும், தாமிரபரணி பாதுகாப்பு இயக்கமும் இணைந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இது தொடர்பாக, சமூக ஆர்வலர்களும், காவல்துறையினரும் தாமிரபரணி ஆற்றில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளிடத்தில் பேசி துணிக்கழிவுகளை ஆற்றில் போட்டு விடாமல் மாற்று வழிகளை பின்பற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

காவல்துறையின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஆற்றை பாதுகாக்கும் இந்த முயற்சியில், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.