கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் கையெழுத்தை போலியாக போட்டு மின் இணைப்பு : நெல்லையில் அடுத்த அதிர்ச்சி


நெல்லையில் கொலை செய்யப்பட்ட ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேனின் கையெழுத்தை போலியாக போட்டு மின்இணைப்பு பெற்றது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற உதவி காவல்துறை ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி . இவர் கடந்த 18ஆம் தேதி டவுண் பகுதியில் பள்ளிவாசலில் தொழுகைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது . கொலை தொடர்பாக தௌபிக் என்ற கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான தௌபிக்கின் மனைவி நூருன்னிஷாவை போலீசார் தேடி வருகிறார்கள் மூன்று தனிப்படை போலீசார் இந்தகொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

ஜாகிர் உசேன் முதலமைச்சருக்கு அளித்த இணையதளம் மூலமாக புகாரில் டவுன் பகுதியை சேல்ந்த முக்கியமான வியாபாரி மீதும், மின்வாரிய பொறியாளர் ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டிருந்தார்.ஜாகிர் உசேன் பிஜிலி பெயரில் போலி கையெழுத்து போட்டு மின் இணைப்பு பெற்றுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, நெல்லை டவுண் போலீசார் ஜாகிர் உசேன் பிஜிலியின் கையெழுத்தை ஆய்வு செய்தனர். அப்போது, தர்காவிற்கு மின்சார இணைப்பு பெயர் மாற்றப்பட்டதில் தர்க்காவுக்கு ஜாகிர் உசேன் பெயரில் போலி கையொழுத்து போடப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அதே போல, ஜாகிர் உசேன் பிஜிலி படுகொலை செய்யப்பட்ட 18-ஆம் தேதி அவர் திருநெல்வேலி வணிகவரி இணை ஆணையருக்கு கொடுத்த புகார் ஒன்றுக்காக அவரை ஆஜராக ஆக கூறியும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த இரு விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.