வீரவநல்லூர் திமுக நகர செயலாளர் கொலை : 4 பேர் குற்றவாளி என தீர்ப்பு

நெல்லை அருகே வீரவநல்லூர், பசும்பொன் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினம் என்ற ரத்தினவேல் பாண்டியன். வீரவநல்லூர் நகர திமுக செயலராக இருந்தார். வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது.

கடந்த 2000ம் ஆண்டில் வீரவநல்லூர் அருகே கிளாக்குளத்தைச் சேர்ந்த மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் வீரவநல்லூர் யாதவர் நடுத்தெருவைச் சேர்ந்த சுப்பையாதாஸின் தந்தை சந்தானம், அவரது நண்பர் ராமையாவை வெட்டிக் கொன்றனர். அதற்குப் பழிக்குப்பழியாக கிளாக்குளத்தில் எதிர்தரப்பை சேர்ந்த ஆதிமூலப்பாண்டியனையும், அவரது நண்பரையும் வெட்டிக் கொன்றனர். இதற்கு பழிக்குப்பழியாக 2009ம் ஆண்டு ஐயப்பன் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். 2000ல் இருந்து 9 ஆண்டுகளில் சாதிய மோதலால் ஒரே ஊரைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சந்தானமாரியம்மன் கோயில் கொடைவிழாவில் அதே ஊரைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு தகராறு ஏற்பட்டது. அப்போது மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த ரத்தினம் என்ற ரத்தினவேல்பாண்டினை கோவிலில் இருந்து விரட்டியடித்துள்ளனர். இந்த சமயத்தில் சுப்பையா தாஸ் தனது தந்தையை கொலை செய்ய உடந்தையாக ரத்தினம் இருந்ததாக கருதியுள்ளார்.

இதனால் அவர் தனது சமூதாயத்தைச் சேர்ந்தவர்களை திரட்டி ரத்தினவேல்பாண்டியனை கொல்ல சதித்திட்டம் தீட்டினார். தொடர்ந்து, இரு மாதங்களாக ரத்தினவேல்பாண்டியனை ரகசியமாக கண்காணித்தனர். வீரவநல்லூர், பத்திரகாளியம்மன் கோயில் தெருவில் உள்ள சலூன் அருகே இரவில் நீண்ட நேரம் நண்பர்களுடன் பேசுவதை அவர் வழக்கமாக வைத்திருப்பதை கண்டறிந்தன.ர

இதனால் அந்த சலூன் கடைக்கு அருகே ஆயுதங்களுடன் முன்கூட்டியே பதுக்கி வைத்துள்ளனர். 2011ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி இரவு பயங்கர ஆயுதங்களுடன் ரத்தினவேல்பாண்டியனை சுப்பையாதாஸ் கும்பல் சுற்றி வளைத்தது. பின்னர், அவரை ஓட ஓட வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பினர். இந்த கொலை சம்பவம் இரு சமூதாயத்தினரிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த கொலை தொடர்பாக, வீரவநல்லூர் போலீசார் கொலையாளிகள், அவர்களுக்கு உதவி செய்தவர்கள், உடந்தையாக செயல்பட்டவர்கள் சுப்பையாதாஸ் உட்பட 21 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

விசாரணை காலத்தில் வீரவநல்லூரைச் சேர்ந்த குமார் என்ற சுடலைமுத்து, அண்ணாமலை, சிவபெருமாள் என்ற சிவா, கூனியூர் நயினார் என்ற ஆறுமுக நயினார் ஆகிய 4 பேர் விசாரணை காலத்தில் உயிரிழந்தனர். இ சுப்பிரமணி என்ற வக்கீல்மணி என்ற மண்டைமணி (45) என்பவர் மீதான வழக்கு தனிவழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதனால், 16 பேர் மீது வழக்கு விசாரணை நடச்து வந்தது. இன்று (மார்ச் 26 ) வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்பையாதாஸ், சுரேஷ், சுரேஷ், கொம்பையா ஆகிய 4 பேரை குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். எஞ்சிய 12 பேரை விடுவிக்கப்பட்டனர். விரைவில் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கருணாநிதி ஆஜரானார்.