50 ஆண்டுகளுக்கு பிறகு சீவலப்பேரி வீதியில் ஓடிய தேர்

சீவலப்பேரி வீதியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு, ஓடிய காசி விஸ்வநாதர் கோவில் தேரை பக்தர்கள் உற்சாகமாக வடம் பிடித்து இழுத்தனர்.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றும் பல்வேறு புராண சிறப்புகளையும் கொண்ட நெல்லை மாவட்டம் சீவலப்பேரி காசி விசுவநாதர்- விசாலாட்சி அம்பாள் திருக்கோவில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் பங்குனி உத்ர திருவிழாவில் உச்சக்கட்டமாக தேரோட்டம் நடைபெறும். 50 ஆண்டுகளுக்கு முன்னர் பல்வேறு காரணங்களால் தேரோட்டம் தடைபட்டு போனது .

இதனால், தேர் சிதலமடைந்த சூழலில் தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேரை திருப்பணி செய்ய பக்தர்களால் முடிவு செய்யப்பட்டது . இந்து சமய அறநிலை துறை உதவியுடன் சுமார் 55 லட்சம் மதிப்பில் புதிதாக தேர் உருவாக்கப்பட்டது.பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதையடுத்து, தேருக்கான வெள்ளோட்ட நிகழ்ச்சி நேற்று (மார்ச் 2) நடைபெற்றது .

பங்குனி உத்திர திருவிழாவும் நேற்று கொடியேற்றத்துடன் காசி விஸ்வநாதர் கோவிலில் தொடங்கியது. காலையில் கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது . தொடர்ந்து கொடி பட்டம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கொடிமரத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது . பிறகு, உற்சவர் காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்பாளுக்கும் கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர், மேளதாளம் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

தொடர்ந்து கொடி மரத்திற்கு பால் மஞ்சள் இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.தொடர்ந்து புதிய தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்து, தேரில் மகா கும்பம் வைக்கப்பட்டு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சீவலப்பேரி வீதிகளில் தேர் உலா வந்தது.50 ஆண்டுகளுக்குப் பின்னர் சீவலப்பேரி ரத வீதியில் வலம் வந்த தேரை நமச்சிவாய கோஷத்துடன் செங்கோல் ஆதின குருமகா சன்னிதானம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து மகிழ்ந்தனர்.