
திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகா வன்னி கோனேந்தல் பகுதிகளில் கடந்த 2024 ஆம் ஆண்டு பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் வரலாறு காணாத மழையினால் சேதமடைந்தது . சேதமடைந்த பயிர்களை அரசு தரப்பில் பார்வையிட்டு, அதற்கான உரிய ஆவணங்களையும் விவசாயிகளிடமிருந்து அரசு அதிகாரிகள் பெற்றுச்சென்றனர். ஆனால், நான்கு மாதங்கள் கடந்தும் விவசாயிகளின் வங்கி கணக்கில் இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்படவில்லை . தமிழக அரசு அதற்கான நிதியை ஒதுக்கியும் விவசாயிகளுக்கு பணம் வந்து சேரவில்லை என்று கூறி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவரிடம் அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டது.
இதுபோன்று அரசு உதவிகள் விவசாயிகளுக்கு குறித்த காலத்தில் கிடைத்தால் மட்டுமே தொடர்ந்து , அவர்களால் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும். இப்படி ஏற்படும் காலதாமதத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட வேளாண்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பயிர் இழப்பீடு குறித்த முழு விபரங்களும் சேகரிக்கப்பட்டு இழப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்' என தெரிவித்தனர்.