நெல்லை அருகே ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.41.78 லட்சத்தை மோசடி செய்த தம்பதி புது வீடு கட்டி ஜாலியாக வாழ்ந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி (42). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர் சென்ட்ரிங் வேலை செய்ய பாளையங்கோட்டை, கேடிசி நகர், அருணாச்சலநகரில் உள்ள முருகன் என்வரது வீட்டிற்குச் சென்றார். அப்பேது, முருகனும், அவரது மனைவி மீனாவும் சுடலைமணிக்கு அறிமுகமாகி உள்ளனர். கடந்த 2022ல் முருகன், சுடலைமணியிடம் தனக்கு ரயில்வே துறையில் அதிகாரிகளை நன்கு தெரியும் என்று கூறி நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய சுடலைமணி முதற்கட்டமாக முருகன்- மீனா தம்பதியிடம் ரூ.1.80 லட்சத்தை கொடுத்துள்ளார். இதுபோல் முருகனின் தங்கை சுப்புலெட்சுமியும் அவரது மகனுக்கு ரயில்வே வேலை வேண்டும் எனக்கூறி முருகன்- மீனா தம்பதியிடம் ரூ.12 லட்சம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. பல தவணைகளாக அவர்கள் இருவரும் சேர்ந்து ரூ.21.78 லட்சத்தை கொடுத்த நிலையில், அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர், அடையாள அட்டைளை அனுப்பி வைப்பதாக முருகன்-மீனா தம்பதி கூறியுள்ளனர்.
தபாலில் வந்த ஆவணங்களை எடுத்துக்கொண்டு சுடலைமணி டெல்லியில் உள்ள அலுவகத்திற்குச் சென்று காட்டி வேலை கேட்டுள்ளார். அப்போதுதான், அந்த பணி ஆணை போலியானது என்பது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து சுடலைமணியும் அவரது தங்கையும் பாளை., தம்பதியின் வீட்டிற்குச் சென்று கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் நீங்கள் கொடுத்த பணத்தில் புது வீடு கட்டிவிட்டேன். 2024ம் ஆண்டுக்குள் பணத்தை தருவதாக் கூறியுள்ளனர். அப்படி பணத்தை தரவில்லை. இதுபோல் அவர்கள் விக்னேஷ் என்பவரிடம் ரூ.11.50 லட்சமும், பிரபு என்பவரிடம் ரூ.8.50 லட்சமும் என மொத்தம் ரூ.41.78 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை தாலூகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் . இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகன்- மீனா தம்பதியை நேற்று கைது செய்தனர். ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்து, அந்த பணத்தில் புதுவீடு கட்டிய தம்பதியின் செயல் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










