நெல்லையில் காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆறுமுகத்தை கொலை செய்துவிட்டு அதிகமான மதுபோதையில் இருந்த சிவா தனது நண்பர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் மது போதையில் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் தகவல்கள் பரவவே, டவுன் போலீசார் இரவு 7 மணியில் இருந்து அந்த பகுதிகளில் விசாரணை நடத்த தொடங்கினர்.
போலீசார் விசாரணையில் வாலிபர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து, உயர் அதிகாரிகள் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிந்து சல்லடை சல்லடையாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, குருநாதன் கோவில் காட்டுப்பகுதியில் உடல் புதைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து இன்று அதிகாலையில் 2 மணி அளவில் ஆறுமுகத்தின் உடலை மீட்டனர். கொலை சம்பவம் மதியமே நடந்திருந்தாலும், இரவில் இருந்து சுமார் 7 மணி நேரம் போலீசார் அங்கு குவிந்ததால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது.
ஆறுமுகம், சிவா மற்றும் கைதான மேலும் 3 சிறுவர்கள் என அனைவரும் பெயிண்டிங் உள்ளிட்ட வேலைக்கு சென்று வந்துள்ளனர். அனைவரும் ஒன்றாக பழகி வந்த நிலையில், ஆறுமுகத்தின் காதல் விவகாரம் மற்றவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மதியம் 1 மணி அளவில் ஆறுமுகத்தை, 4 பேரும் அழைத்து மதுகுடிக்க அழைத்துள்ளனர். குருநாதன்கோவில் சுடுகாட்டு பகுதி அருகே உள்ள ஒரு தோப்புக்குள் சென்று மது குடித்துள்ளனர். அப்போது, ஆறுமுகத்திடம் காதலை கைவிடுமாறு கேட்டுள்ளனர். ஆனால் ஆறுமுகம் மறுத்துள்ளார். இதனால், மது போதையில் இருந்த ஆறுமுகத்தை 2 பேர் கீழே தள்ளிவிட்டு கால்களை பிடிக்க மற்ற 2 பேரும் கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக்கொன்றனர்.
பின்னர் , அங்குள்ள ஒரு பள்ளத்தில் அவரது உடலை போட்டு, அதன்மீது ஓலைகள் போட்டு மூடி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர். மாலை 6 மணி வரையிலும் ஆறுமுகம் கொலை செய்யப்பட்ட தகவல் வெளியே வரவில்லை என்பதால் நிம்மதி அடைந்துள்ளனர். தொடர்ந்து, மண்வெட்டியுடன் ஆறுமுகம் உடலை மறைத்து வைத்திருந்த தோப்புக்கு மீண்டும் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த பள்ளம் தோண்டி ஆறுமுகம் உடலை புதைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.











