புரியாத புதிராக காங். கட்சி தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கு திசையன்விளையில் சி.பி.சி.ஐ.டி., மீண்டும் விசாரணை

thisayanvilai-congress-leader-jeyakumar-murder-case-cpcid

நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கு குறித்து திசையன்விளையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர்.

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே கரைச்சுத்துப்புதூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். கடந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி மாயமானார். இது குறித்து உவரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அடுத்த நாள் அவரது வீட்டிற்கு பின்புறம், அவருக்கு சொந்தமான தோட்டத்தில், உடல் பாதி எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து 10 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இறப்புக்கு முன்பு ஜெயக்குமார் எழுதிய கடிதங்கள் போலீசாருக்கு கிடைத்தன. அந்த கடிதங்களில் குறிப்பிடப்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி., போலீசார் துவக்கினர். ஜெயக்குமார் கடிதங்களில் குறிப்பிட்ட நபர்கள், அவரது குடும்பத்தினர் உட்பட பல்வேறு தரப்பினருக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை செய்து வந்தனர் . எனினும், ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஆன நிலையிலும் வழக்கில் துப்பு துலங்கவில்லை. வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் இது வரை வெளிப்படையாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கு இதுவரை புரியாத புதிராகவே உள்ளது.

இந்நிலையில், நேற்று திசையன்விளையில் நெடுஞ்சாலைத்துறை இல்லத்திற்கு நெல்லை இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையில் அதிகாரிகள், போலீசார் வந்தனர். அவர்கள் அங்கு ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து கரைச்சுத்துப்புதூர் உள்ளிட்ட ஜெயக்குமார் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அவர்கள் ஆய்வு செய்தனர்.

இது குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் வட்டாரத்தில் கேட்ட போது, “ஜெயக்குமார் வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கிறது. கரைச்சுத்துப்புதூரில் வழக்கமான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை முடிந்த பிறகு தெரிவிக்கப்படும்” என்றனர்.

நீண்ட இடைவெளிக்குப்பின்பு, ஜெயக்குமார் கொலை வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளதால் திசையன்விளையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.