திருநெல்வேலி: தீயணைப்பு பணியில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி

தீ விபத்தில்லாத இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம் என்ற கருத்தின் அடிப்படையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் தீ தொண்டு நாள் வார விழா இன்று தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, ஏப்ரல் 14ஆம் தேதி நாடு முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் பணியின் போது உயிர் நீத்து வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீத்தார் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையத்தில் உயிர் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் திருநெல்வேலி மண்டல துணை இயக்குனர் சரவணபாபு திருநெல்வேலி மாவட்ட அலுவலர் பானுப்பிரியா பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் நிலைய அலுவலர் சுந்தரம் மற்றும் அனைத்து வீரர்களும் கலந்து கொண்டனர்.


மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் இருபதாம் தேதி வரை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் , பள்ளிகள், கல்லூரிகள் பொதுமக்கள் கூடும் இடங்களில் தீ தடுப்பு பிரச்சாரங்கள் மற்றும் பேரிடர் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்படவுள்ளது. இந்த ஆண்டு தீ விபத்து இல்லாத இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம் அதாவது, Unite to ignite A fire safe india என்ற தலைப்பில் நாடு முழுவதும் தீ தொண்டு வார விழா கொண்டாடப்படுகிறது.