அமைச்சர் பொன்முடியை கண்டால் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் - நெல்லையில் நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்

நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகேயுள்ள அம்பேத்கர் சிலைக்கு பாரதிய.ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடத்தில் பேசுகையில், ' இந்த நாள் எனக்கு மிகவும் ராசியான நாள். கடந்த 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து விட்டு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை புறப்பட்டு சென்றேன். அப்போது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா எனக்கு நெல்லை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பை வழங்கினார். சுமார் 25 ஆண்டுகளான நிலையில் தற்போது பாரத பிரதமர் மோடி மற்றும் தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழகத்தின் பாஜக தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பினை எனக்கு வழங்கியுள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர் அம்பேத்கர். ஆனால் , அரசியல் சாசன சபையில் அம்பேத்கருக்கு உரிய இடத்தை கொடுக்க காங்கிரஸ் மறுத்தது. அம்பேத்கர் என்ன திட்டங்கள் செய்தார் என்பதை அனைவரும் அறிய வேண்டும். அவரது, நினைவிடங்களை கூட காங்கிரஸ் கட்சி பராமரிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடி அம்பேத்கரின் நினைவாலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை புதுப்பித்தார்.

தமிழகத்தில் அம்பேத்கருடைய நல்ல செயல்களை சொல்வதை விட்டுவிட்டு என்னெல்லாமோ சொல்லிக்கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் அம்பேத்கர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலைகளை சிறைச்சாலையில் அடைப்பது போல் கூண்டில் வைத்து அடைத்துள்ளார்கள். இதனை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அ.தி.மு.க பாஜக கூட்டணி எந்த இழுபறியும் இல்லாமல் அமைந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் உள்ளது. துணை முதல்வர் பதவி உள்ளிட்டவைகள் குறித்து இப்போதைக்கு எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அமைச்சர் பொன்முடியின் பேச்சை ஒவ்வொரு பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் நினைத்து பார்க்க வேண்டும். 2026-ல் அதனை நினைத்து பார்த்து வாக்களிக்க வேண்டும். அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் இதுவரை முதல்-அமைச்சர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்-அமைச்சர் பயப்படுகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.