விக்கிரமசிங்கபுரம் நகராட்சி மேலாளர் மீது வன்கொடுமை புகார் பதிவு செய்ய கோரி உள்ளிருப்பு போராட்டம் :

complaint-of-abuse-against-the-vickramasingapuram-municipality-manager

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி மேலாளர் மீது வன்கொடுமை புகார் பதிவு செய்ய வலியுறுத்தி தூய்மை பணியாளர் ஒருவர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்.

திருநெல்வேலி: விக்கிரமசிங்கபுரம் நகராட்சி மேலாளர் கணேசன், துப்புரவு பணியாளர்களின் பணிப்பதிவேட்டை முறையாக பராமரிக்கவில்லை என்றும் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் பதிவு செய்ய வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ,புதிய தமிழகம் கட்சியின் அம்பாசமுத்திரம் நகர செயலாளர் தேவ சகாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகராட்சி மேலாளர் கணேசன், துப்புரவு பணியாளர்களுக்குரிய பணப்பலன்களை வழங்குவதில்லை. பணியாளர்களின் ஊதிய உயர்வு நிலுவைத் தொகை, வாரிசு பதிவுக்கான பணிப்பதிவேட்டு நகல்கள், வருங்கால வைப்பு நிதி வட்டித்தொகை மற்றும் பயணப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர் கண்டு கொள்ளவில்லை.

துப்புரவு தொழிலாளர் மாரியப்பன் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு பணிக்கு திரும்பிய பின்னரும் அவருக்கு 2021 முதல் 2024 வரையிலான ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. பகவதிக்கு என்பவருக்கு 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. மேலும், துப்புரவு பணியாளர்களின் வாரிசு நியமனங்களுக்காக பணிப்பதிவேட்டின் நகல்கள் வழங்க கோரியும் வழங்கப்படவில்லை. 1998 ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள வருங்கால வைப்பு நிதிக்கான வட்டித்தொகையை 2023 ம் ஆண்டு வரை ஆணையாளர் கணக்கிட்டிருந்தும், இதுவரை வழங்கப்படவில்லை. வெளியூர் பணிக்கு சென்ற பணியாளர்களுக்கான பயணப்படியும் வழங்கப்படவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துப்புரவு பணியாளர்கள் என்பதாலேயே அவர்களின் பணிப்பதிவேட்டை மேலாளர் முறையாக பராமரிப்பதில்லை என்றும், இது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், மேலாளர் மீது வன்கொடுமை புகார் பதிவு செய்ய வலியுறுத்தியும், துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் மாரியப்பன் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.