
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த அறை பூட்டப்பட்டுக் கிடக்கிறது. பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டடத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி (EC) பெற அதிகாரிகள் அலட்சியம் காட்டியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.இதனால், தாய்மார்கள்காலியாக உள்ள பேருந்துகளுக்கு சென்று பாலூட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதே,நேரத்தில், திருநெல்வேலி மாநகராட்சியின் வார்டு கவுன்சிலருக்கு மூடப்பட்டு கிடக்கும் தாய்ப்பால் கொடுக்கும் அறைக்கு அருகிலேயே சட்டவிரோதமாக கடை நடத்த அனுமதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் சுற்றுச்சூழல் அனுமதி பெறாததால் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. இது, மாநகராட்சி அதிகாரிகளின் பாரபட்சமான போக்கையும், பொதுமக்களின் நலனில் அக்கறை இல்லாததை காட்டுவதாகவும் மக்கள் குமுறுகின்றனர்.
இது குறித்து பயணிகள் கூறுகையில், 'தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான பாதுகாப்பான இடம் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. குழந்தைகளுடன் பயணம் செய்யும் தாய்மார்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இந்த விவகாரத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ஆகியோர் உடனடியாக தலையிட்டு, தாய்ப்பால் கொடுக்கும் அறையை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். சட்டவிரோதமாக செயல்படும் கடையை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்று காட்டமாக கூறுகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்க மேலப்பாளையம் உதவி ஆணையரை தொடர்பு கொண்டோம். அப்போது, அவர் இந்த பிரச்னை குறித்து விசாரிப்பதாக ஒற்றை வரியில் கூறி விட்டு போனை வைத்து விட்டார்.