தடையை மீறி நெல்லை, தூத்துக்குடி கடலில் மீன் பிடிக்கும் கேரள மீனவர்கள்

Kerala-fishermen-fishing-nellai-thoothukudi-sea-ban-period

மீன்பிடி தடைக்காலத்தில் அரசின் தடையை மீறி கன்னியாகுமரி மற்றும் கேரள மாநில விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 49 மீனவ கிராம மக்கள் இன்று ( மே 14) நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை இரு மாத காலங்கள் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளது. இந்த காலத்தில் மீன்கள் இனப்பெருக்கம் செய்து குஞ்சுகளை பொரிக்கும் காலம். இந்த இரண்டு மாதத்தில் உருவாகும் மீன்களை நம்ரிதான், பத்து மாதங்கள் நெல்லை தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபடுவார்கள்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் அரசின் தடையை மீறி நெல்லை தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிக்குள் அத்துமீறி மீன்களைப் பிடித்து செல்வதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 49 மீனவ கிராம மக்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்துள்ளனர். அதில், கூறியிருப்பதாவது, 'நாட்டுப் படகு மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதிக்குள் விசைப்படகு மீனவர்கள் எந்த காலத்திலும் மீன்பிடிக்க வரக்கூடாது. ஆனால், மீன்பிடி தடை காலத்திலேயே மீன் பிடிக்க வரும் இந்த விசை படகுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதனால், எங்கள் வாழவாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அத்துமீறி வரும் கன்னியாகுமரி மற்றும் கேரள மாநில விசைப்படகுகளை அரசு பறிமுதல் செய்ய வேண்டும். அந்த மீனவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் 'என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.