
திருநெல்வேலியில் ரூ. 85.56 கோடி செலவில் கட்டப்பட்டு , பயன்பாட்டுக்கு வராத சந்திப்பு பேருந்து நிலையத்திற்குள் ஒரே ஒருவரை மட்டும் கடை நடத்த அனுமதித்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் எஸ்.பி. முத்துராமன் கூறுகையில், தேவையான அனுமதி பெறாத கட்டடத்தில் எந்தவொரு வணிக நடவடிக்கையும் மேற்கொள்வது சட்டவிரோதம் . சுற்றுச்சூழல் அனுமதி இல்லாததால், நான்கு தளங்களில் உள்ள கடைகள் திறக்க முடியவில்லை. இத்தகைய சூழலில் மாநகராட்சி அதிகாரப்பூர்வமாக டெண்டர் விடவோ அல்லது யாருக்கும் கடை ஒதுக்கவோ முடியாது. தற்போது பேருந்து நிலையத்தில் ஒரு கடை இயங்குகிறது. இந்த கடைக்கும் வாடகை யார் வசூலிக்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொருவரான பெர்டின் ராயன் கூறுகையில், அரசு விதிமுறைகளை மீறி, கட்டடம் பணி நிறைவு சான்றிதழ் இல்லாமலே ய டான்ஜெட்கோ மின்சாரம் வழங்கியுள்ளது என்றார்.
இதுகுறித்து தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையர் ஜான்சனிடம் கேட்டபோது, குமார் என்பவருக்கு கடை ஒதுக்கப்பட்டுள்ளது. கடை ஒதுக்கீடு தொடர்பாக டெண்டர் விடப்பட்டதா என்ற கேட்ட போது, ' சரிபார்ப்பதாக 'பதிலளித்தார்.
மாநகராட்சி ஆணையர் என்.ஓ. சுகபுத்ரா இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேயர் ஜி. ராமகிருஷ்ணன் கூறுகையில், கடை செயல்படுவது குறித்து எனக்கு தெரியாது . நான் தற்போது சென்னையில் இருக்கிறேன். நான் திரும்பியதும் பேருந்து நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்கிறேன் என்று கூறினார்.
இந்த விவகாரம் திருநெல்வேலி மாநகராட்சியின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாததை காட்டுகிறது. பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டும் பயன்பாட்டுக்கு வராத பேருந்து நிலையத்தில், முறையான அனுமதி இல்லாமல் ஒரு கடை செயல்படுவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . விரைவில் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்று பேருந்து நிலையத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.