
திருநெல்வேலியில் மின்வாரியத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார். அப்போது, ஆழியார் மின் உற்பத்தி நிலையத்தின் திறன் குறைவாக இருப்பது குறித்த கேள்விக்கு , "நான் புதிதாகத்தான் இந்த பொறுப்பை ஏற்றிருக்கிறேன். முதற்கட்ட ஆய்வு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து, பிரச்சனைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
மின்தடை தொடர்பான தகவல்களை தெரிவிப்பதில் தாமதம் ஏற்பட்டால், மின்னகம் நுகர்வோர் சேவை மையம் முறையாக பதிலளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதில் கூறிய அமைச்சர், "நாளை காலை நான் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளேன். மக்களின் பிரச்னைகளை உடனடியாக, தீர்ப்பதற்குத்தான் மின்னகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறை எப்போது அமல்படுத்தப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை எல்லோருக்கும் தெரியும். நிதிநிலை பிரச்சனைகள் இருந்தாலும், பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். காலம் கணியும் போது மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வரும் என்றார். திருநெல்வேலி மின்வாரிய ஊழியர்கள் சிறப்பாக செயல்படுவதாகவும் அமைச்சர் பாராட்டினார்.