
கீழ்ப்பாக்கம் மனநல காப்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாக வாழ உரிய உதவிதொகை வழங்கும் திட்டமோ, அவர்களை பாதுகாக்கும் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கும் திட்டமோ, மனநோயில் இருந்து மீண்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்திடும் வகையில் தமிழக அரசிடம் எந்த திட்டங்களும் இல்லை என்று சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசின் சார்பில் சென்னை, ஏர்வாடி (இராமநாதபுரம்), தேனீ(முழுமையான செயல்பாட்டில் இல்லை) ஆகிய பகுதிகளில் மனநல காப்பகங்கள் செயல்பாட்டில் உள்ளது. இதில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மையம் கடந்த 1793ல் தொடங்கப்பட்டது. இந்தியாவில் மிக பழமைவாய்ந்த மனநல சிகிச்சை மையங்களில் ஒன்றாகும். 230 ஆண்டுகள் ஆன சிறப்பு பெற்ற இம்மையம் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்த துறையின் கீழ் இயங்கி வருகிறது.
சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இங்குள்ள மனநல மருத்துவமனையில் 800 க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும், 500க்கும் அதிகமான புறநோயாளிகளும் சிகிச்சை பெற இயலும். 80 மருத்துவர்கள், 140 செவிலியர்கள் 400க்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். மன அழுத்தம், பை போலார் கோளாறு, ஸ்கிசோஃப்ரினியா உள்ளிட்ட பல்வேறு மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இங்கு சிகிச்சை அளிப்பதிலும், காப்பகத்தில் மனநோயாளிகளை பராமரிப்பதிலும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் முழுமையாக குணம் அடைவதற்கு முன்பாகவே நோயாளிகள் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்ளுடன் பெற்றோர் அல்லது பராமரிப்பவர்கள் இங்கு தங்க எவ்வித வசதிகளும் ஏற்படுத்தபடவில்லை. இதனால் இவர்கள் வெளியில் தான் தங்க வேண்டிய நிலையில் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
பணியாளர்கள் பற்றாக்குறை காரணத்தால் இங்குள்ள பல்வேறு துறைகளும் படிப்படியாக அடைக்கப்படும் நிலையில் தொலைபேசி வழியாக ஆலோசனை வழங்கும் மையமும் செயலற்ற நிலையில் உள்ளது. கடந்த 2024 அக்டோபரில் இம்மருத்துவமனையினை தனியார்மயமாக்க அரசு முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதற்கு அரசு மறுப்பு தெரிவித்த போதும் இங்குள்ள குறைபாடுகளை களைந்து மனநல நோயாளிகள் மறுவாழ்வு பெறுவதில் உரிய அக்கறை காட்டியதாக தெரியவில்லை.
மனநல பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாக வாழ உரிய உதவிதொகை வழங்கும் திட்டமோ, அவர்களை பாதுகாக்கும் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கும் திட்டமோ, மனநோயில் இருந்து மீண்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்திடும் வகையில் அரசிடம் எந்த திட்டங்களும் இல்லை. உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி 7 பேரில் ஒருவர் உளவியல் பிரச்னையில் பாதிக்கப்பட்டு உள்ள சூழலில் கூடுதல் மருத்துவமனை அமைக்கவோ, இருக்கும் மையங்களை மேம்படுத்தவோ அரசு முயலாதது அதிகரிக்கும் இத்தகைய பாதிப்புகளுக்கு எந்த வகையிலும் தீர்வாகாது" என்று கூறியுள்ளார்.