பெருமையோ பெருமை... எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைந்து சாதித்த 6 வயது திருநெல்வேலி சிறுமி!

6-year-old-tirunelveli-girl-has-achieved-everest-base-camp

திருநெல்வேலியை சேர்ந்த 6 வயது சிறுமி லலித் ரேணு, உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரமான பேஸ் கேம்பை அடைந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைந்த முதல் தமிழக சிறுமி என்ற பெருமையை லலித் ரேணு பெற்றுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 8 வயதுக்கு உட்பட்ட எந்த குழந்தையும் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் சென்றதில்லை. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து சங்கர்நகர் ஸ்ரீஜெயேந்திர மெட்ரிக் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வரும் லலித் ரேணு, முதன்முறையாக இந்த சாதனையை நிகழ்த்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

லலித் ரேணுவுக்கு மலையேற்றம் என்பது குடும்பத்தில் இருந்து வந்த பாரம்பரியம். அவரது தந்தை ஸ்ரீதர் வெங்கடேஷ் சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சிறுவயது முதலே மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட ஸ்ரீதரும் அவரது மனைவி அபர்ணாவும், லலித் ரேணுவை சிறுவயதில் இருந்தே மலைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதன் விளைவாக, இரண்டரை வயதில் வெள்ளியங்கிரி மலையில் ஏறத் தொடங்கிய லலித் ரேணு, இன்று எவரெஸ்ட் பேஸ் கேம்ப் வரை சென்று வந்துள்ளார்.

சிறுமி லலித் ரேணு இதுவரை சபரிமலை, வெள்ளியங்கிரி மலை, பருவதமலை, ராமர் மலை, தோரணமலை, சதுரகிரி மலை, பத்ரிநாத், நம்பிக் கோவில் மலை, செண்பகாதேவி அருவி, ஹரிஹர் போர்ட், கேதார்நாத் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மலைகளில் ஏறி இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தில் 18,000 அடி உயரத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைவது சாதாரண காரியமல்ல. 130 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த மலையேற்ற பயணத்தை லலித் ரேணு 13 நாட்களில் நிறைவு செய்துள்ளார். இதில் 8-9 நாட்கள் ஏறுவதற்கும், 4 நாட்கள் இறங்குவதற்கும் எடுத்துக்கொண்டார். தனது ஆறாவது வயதில் இந்த கடினமான இலக்கை எட்டிய சிறுமி லலித் ரேணுவின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.