திருநெல்வேலி: அவதூறுகளை பரப்பினால் கடும் நடவடிக்கை... வள்ளியூர் தாக்குதல் விவகாரத்தில் போலீஸ் எச்சரிக்கை

strict-action-will-be-taken-against-spreading-defamation-police-warn-vallioor-attack-case

திருநெல்வேலி காவல்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு வள்ளியூரில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாண்டியன் காலனியைச் சேர்ந்த ஆதிமூலம் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 24) என்பவர், வள்ளியூர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமையாவின் மகன் கணேசன் (வயது 42), தனுஷ்கோடி (வயது 39), மாணிக்கம் (வயது 26) மற்றும் சுரேந்தர் (வயது 28) ஆகியோரால் தாக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் காயமடைந்த சுரேஷ், வள்ளியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்த வள்ளியூர் காவல்துறையினர், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கணேசன், தனுஷ்கோடி, மாணிக்கம் மற்றும் சுரேந்தர் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கணேசன் என்பவர் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தென் மண்டல இளைஞரணி தலைவராக இருப்பதுடன், வள்ளியூர் காவல்துறையின் கண்காணிப்பில் உள்ள நபர் ஆவார். மேலும், தனுஷ்கோடி என்பவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் புரிந்த குற்றச்செயலுக்காகவே தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, மேற்படி அமைப்பைச் சேர்ந்த சிலர் காவல்துறையை அணுகினர். எனினும், குற்றச்செயலுக்காக கைது செய்யப்பட்ட நபர்களை சட்டப்படி விடுவிக்க இயலாது என்று அவர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த அமைப்பைச் சார்ந்த சிலர் சமூக வலைதளங்களிலும், வாட்ஸ்அப் குழுக்களிலும் காவல்துறையை எதிர்த்து உண்மைக்கு புறம்பான மற்றும் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பி வருகின்றனர். காவல்துறையினர் பொய் வழக்குகள் போடுகிறார்கள் என்றும், குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறார்கள் என்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது சட்டத்தின் அடிப்படையில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற கொள்கையின்படி, புகார்களின் தன்மை மற்றும் கிடைக்கப்பெற்ற சான்றுகளின் அடிப்படையிலேயே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான பொய்யான மற்றும் திசைதிருப்பும் தகவல்களை பரப்புவது ஒரு புதிய நடைமுறையாக காணப்படுகிறது. சட்டத்திற்குட்பட்டு மேற்கொள்ளப்படும் காவல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்துடன், உண்மைக்கு புறம்பான அவதூறுகளைப் பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.