
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியான எடை அளவில் வழங்கப்படுவதை உறுதி செய்ய ப்ளூடூத் மூலம் தராசு இணைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், இதனால் ஏற்படும் காலதாமதம் பொதுமக்களை கடும் அவதிக்குள்ளாக்கி வருகிறது. ஒவ்வொரு பொருளையும் சரியான எடைக்கு வழங்கிய பிறகே அடுத்த ரேஷன் கார்டை பதிவு செய்ய முடிவதும், என்.பி.எச் மற்றும் பி.எச் கார்டுகளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை கைரேகை பதிவு செய்ய வேண்டியிருப்பதும் காத்திருப்பு நேரத்தை அதிகப்படுத்துவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவு ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. சமீப காலமாக ரேஷன் பொருட்களின் எடை குறைவாக இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக கடைகளில் உள்ள தராசுகள் ப்ளூடூத் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகை வைத்தவுடன் ஒவ்வொரு பொருளையும் துல்லியமாக எடைபோட்டு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோவிற்கு ஒரு கிராம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தாலும் கணினியில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
இந்த புதிய நடைமுறையின் காரணமாக ஒரு ரேஷன் கார்டுக்கு பொருட்கள் வழங்குவதற்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆகிறது. சில சமயங்களில் கைரேகை சரியாகப் பதியாவிட்டால் மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டியிருப்பதால் மேலும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், நாளொன்றுக்கு 100 முதல் 150 கார்டுகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்து வந்த கடைகளில் தற்போது 30 முதல் 40 கார்டுகளுக்கு மட்டுமே வழங்க முடிகிறது. ஒருபுறம் ப்ளூடூத் இணைப்பு மற்றும் கைரேகை பதிவு தாமதம் என்றால், மறுபுறம் பல ரேஷன் கடைகளில் ஒரே ஒரு விற்பனையாளர் மட்டுமே பணியாற்றி வருகிறார். அவரே மூட்டை தூக்கி பிரிப்பது முதல், கார்டுகளை பதிவு செய்து பொருட்கள் வழங்குவது வரை அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியிருப்பதால் கூடுதல் சுமை ஏற்படுகிறது. பெண் பணியாளர்கள், வயதான மற்றும் உடல்நிலை சரியில்லாத ஊழியர்கள் உள்ள கடைகளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.
இதனால் பொறுமையிழந்த பல ரேஷன் கார்டுதாரர்கள், பொருட்கள் வழங்க இவ்வளவு நேரம் ஆவதைக் குறித்து கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. மேலும், பல நேரங்களில் சர்வர் பிரச்சனை மற்றும் நெட்வொர்க் குறைபாடு காரணமாக கைரேகை பதிவாவதில் சிக்கல் ஏற்பட்டு, பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு சரியான எடையில் பொருட்கள் வழங்க அரசு எடுத்துள்ள இந்த முயற்சி நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக இருந்தாலும், இதனால் ஏற்படும் அதிகப்படியான காத்திருப்பு நேரத்தை தவிர்க்க மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். குறிப்பாக, ஒரு விற்பனையாளர் மட்டும் உள்ள கடைகளில் பணியாளர்களின் சிரமத்தை குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்களும் வலியுறுத்துகின்றனர். எனவே, இந்த நல்ல திட்டத்தின் முழு பலனும் மக்களை சென்றடைய காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இந்தத் திட்டம் முழுமையாக தமிழ்நாடு முழுவதும் அமலுக்கு வந்தால், ரேஷன் கடைக்கு செல்லும் பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு மட்டுமே ரேஷன் கடை பணியாளர் இனிமேல் பில் போட முடியும். வாங்காத பொருள்களுக்கு ரேஷன் கடை பணியாளர் பில் போட முடியாது. அதனை கள்ளச்சந்தையில் விற்கவும் முடியாது. தமிழக அரசின் மிகச்சிறந்த திட்டம் தான் இது ஆனால் இதில் ஏற்படும் காலதாமதத்தை களைவதற்கு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.