திருநெல்வேலி: குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்கவும்!- நெல்லையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Pay-Rs-26-thousand-as-minimum-wage-Trade-unions-protest-in-Nellai

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு விரோதமான 4 சட்ட தொகுப்புகளையும் திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது, அரசு துறையில் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26 ஆயிரம் மற்றும் குறைந்தபட்ச பென்ஷன் தொகையாக ரூ.9 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச மாநில அமைப்பு செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏ ஐ டியூ சி மாவட்ட பொதுச் செயலாளர் சடையப்பன் தொடக்க உரையாற்றினார். எச்.எம் எஸ் மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், ஐ என் டி யு சி மகாராஜன், சி ஐ டி யு மாநில குழு உறுப்பினர் மோகன், சிஐடியு மாவட்ட தலைவர் பீர் முகமதுசா, நிர்வாகிகள் ஜோதி, சரவணபெருமாள், ஏஐடியுசி ரங்கன், உலகநாதன், ஐஎன்டியூசி உமாபதி சிவன், கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், தி.மு.க மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் அனிதா சிறப்புரையாற்றினர். தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கத்தினர் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சைபுதீன் நன்றி கூறினார். இதில் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.