
தென்னக ரயில்வே அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் மறுத்து வருவதாக குற்றம்சாட்டிய நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், இது போன்ற செயல்பாடுகள் மக்கள் பிரதிநிதிகளை ரயில் மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடத் தூண்டும் என்று எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக ராபர்ட் புரூஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் நெல்லை பாராளுமன்ற தொகுதிகளான நெல்லை-நாகர்கோவில் மற்றும் நெல்லை - தென்காசி பிரிவுகளில் உள்ள ரயில் நிறுத்தங்கள் தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. ஆனால், அதில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்க அவர்கள் மறுத்துவிட்டார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்காலத்தில் பணகுடி, மேலப்பாளையம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. தொற்று காலம் முடிந்த பின்னரும் அந்த உத்தரவு திரும்பப் பெறப்படாமல் உள்ளது. இதனைத் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், "இது ரயில்வே வாரியத்தால் எடுக்கப்படக்கூடிய முடிவு" என அதிகாரிகள் பதில் கொடுத்துள்ளனர். "யாரைக் கேட்டு அந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது?" என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை என்றும் எம்.பி. ராபர்ட் புரூஸ் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடிப்படை வசதிகள் புறக்கணிப்பு
மேலும், வள்ளியூர், பணகுடி, நாங்குநேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லை எனவும், பொதுமக்கள் நாள்தோறும் வந்து செல்லும் நிலையில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒய் வடிவ மேம்பால திட்டத்திற்கு காலதாமதம்
நெல்லை மாநகரம், பாளையங்கோட்டை குலவணிகர்புரம் பகுதியில் ஒய் வடிவ மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ரயில்வே வாரியத்திற்கு ஒப்புதல் அனுப்பி ஒரு வருடத்திற்கும் மேலாகியும், இதுவரை ரயில்வே வாரியத்தால் பணிகள் தொடங்குவதற்கான தடையில்லா சான்று (NOC) கொடுக்கப்படாமல் காலதாமதம் படுத்தப்பட்டு வருகிறது. அதனையும் விரைவாக செய்து கொடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில், ரயில்வே அதிகாரிகள் அதற்கு செவிமடுக்காமல் இருப்பது தவறு என்றும் அவர் சாடியுள்ளார்.
போராட்ட எச்சரிக்கை
"இது போன்ற சம்பவங்களால் மக்கள் பிரதிநிதிகளை ரயில் மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட தென்னக ரயில்வே அதிகாரிகள் தூண்ட வேண்டாம்" என்று தனது அறிக்கையில் ராபர்ட் புரூஸ் எம்.பி. எச்சரித்துள்ளார். ரயில்வே நிர்வாகம் மக்களின் அத்தியாவசிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே அவரது வலியுறுத்தலாக உள்ளது.