
அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை தொழிலாளர்களுக்கு வழங்காத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் எச்சரித்துள்ளார்.
சென்னை தொழிலாளர் ஆணையர் ராமன் உத்தரவின்படி, 1948-ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ், 2025 ஏப்ரல் மாதத்திற்கான திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவது தொடர்பாக, நெல்லை தொழிலாளர் உதவி ஆணையரின் (அமலாக்கம்) ஆட்சி எல்லைக்குட்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது, மொத்தம் 27 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக ஊதியம் வழங்கிய நிறுவனங்கள் கண்டறியப்பட்டன. கண்டறியப்பட்ட நிறுவனங்கள், அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கூலிக்கும், நிர்வாகம் வழங்கிய சம்பளத்திற்கும் இடைப்பட்ட வித்தியாசத் தொகையான ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்து 988-ஐ சம்பந்தப்பட்ட 14 தொழிலாளர்களுக்குப் பெற்று வழங்கக் கோரி, நெல்லை தொழிலாளர் இணை ஆணையரின் 2 கேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும், அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறையாமல் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் வலியுறுத்தியுள்ளார். தவறும் பட்சத்தில், அந்நிறுவனங்கள் மீது 1948-ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.