ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? - நெல்லையில் கே.எஸ்.அழகிரி பேட்டி

what-is-wrong-with-asking-for-a-share-in-the-ruling-power-k-s-alagiri-in-nellai

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதில் தவறில்லை. நிதி தொடர்பான சிரமங்கள் தமிழகத்தில் உள்ளதால் டாஸ்மாக் நிறுவனத்தை அரசு நடத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாக நெல்லையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பேட்டி

முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ' ஏழை எளிய மக்களின் அவசர தேவைக்காக அடகு வைக்கப்படும் தங்க நகைக்கு விதித்துள்ள விதிமுறைகளை அரசு தளர்த்த வேண்டும். நாட்டில் எந்த பிரச்சனை என்றாலும் அதன் பின் மதம் வருகிறது. காங்கிரஸ் கட்சி நாத்திக கட்சி கிடையாது. பாஜக அனைத்திலும் வெறுப்பு அரசியலை விதைக்கிறது. அன்பு என்பதே இல்லாத நிலை உருவாகி வருகிறது.தமிழக முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்வதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.தமிழகத்தில் இருந்து அதிகமான ஜிஎஸ்டி,அதிகமான வருமான வரி செலுத்தினாலும் மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்திற்கு பெருமளவு கிடைப்பதில்லை. சொன்ன வாக்குறுதி எதனையும் மத்திய அரசு தமிழகத்திற்கு செய்தது கிடையாது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்திற்கு மீண்டும் ஒரு பெரிய துரோகத்தை செய்துவிட்டது.

பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த போர் தொடர்பாக நாடாளுமன்றத்தை கூட்டி பிரதமர் விளக்கம் கொடுப்பது தார்மீக கடமை. சீனா இந்தியா யுத்தம் நடந்த போது நாடு பெரிய பின்னடைவை சந்தித்த நிலையில் நேரு நாடாளுமன்றத்தை கூட்டி நிலைமையை தைரியத்துடன் எடுத்துரைத்தார் . அந்த தைரியம் தற்போதைய பிரதமருக்கு இல்லை எதிர்க்கட்சிகள் அடங்கிய குழுவை வெளிநாட்டிற்கு அனுப்பி விளக்கம் அளிப்பது எந்த ராஜதந்திரமும் கிடையாது. அது ஒரு கேலி கூத்து . நாடாளுமன்றத்தை கூட்டி போர் தொடர்பாக அரசு விளக்கம் கொடுப்பதற்கு தயங்குவது ஏன் ?. காங்கிரஸ் கட்சியை விட திமுகவின் உட்கட்டமைப்பு பெரிதாக இருப்பதாக நானே கருத்து கூறியிருக்கிறேன் அப்படி சொல்வது தொண்டர்களின் உத்வேகத்தை அதிகரிப்பதற்காக மட்டும்தான்.ராம ராஜ்ஜியத்தில் கூட திருட்டுகளும் தவறுகளும் நடந்துள்ளது.ஒரு சம்பவத்தை வைத்து அரசை குற்றம் சாட்டுபவர்கள் எல்லோரும் அரசுக்கு எதிரான மனநிலை உடையவர்களாக இருக்கிறார்கள். நெல்லை கிழக்கு மாவட்ட ஜெயக்குமார் மரண வழக்கை அரசு சிறப்பாக செய்து வருகிறது.நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற பொறுப்புணர்ச்சியுடன் விசாரணை நடந்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பதில் எந்ததவறில்லை. ஆனால் அதனை அழகிரி சொல்ல முடியாது . அதற்கான முடிவை தலைமை எடுக்க வேண்டும் தமிழகத்தில் கள், சாராயம், இருக்கக் கூடாது என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. முதலமைச்சரிடம் மதுவிலக்கு தொடர்பாக பேசியிருக்கிறோம் . அரசியல் ரீதியாக மதுவிலக்கு தொடர்பான திடமான முடிவை முதலமைச்சர் எடுப்பார் . தமிழக அரசுக்கு நிதி பிரச்னை உள்ளது.அதன் காரணமாகவே டாஸ்மாக் நிறுவனத்தை தமிழக அரசு நடத்தி வருகிறது .'

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.