சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 15ம் தேதி நெல்லையில் அல்வாசிட்டி மாரத்தன் போட்டி

halwa-city-marathon-to-be-held-in-nellai-on-june-15th-to-mark-environment-day

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தாமிரபரணி நதியைப் பாதுகாக்கும் வகையில், நெல்லை, பாளையங்கோட்டையில் ஜூன் 15-ம் தேதி விழிப்புணர்வு மாரத்தன் போட்டி நடைபெறவுள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தாமிரபரணி நதியைப் பாதுகாக்கவும், நெகிழியை ஒழிக்கவும் வலியுறுத்தி, திருநெல்வேலியில் ஜூன் 15-ம் தேதி காலை 6 மணிக்கு பாளையங்கோட்டை பார்வையற்றோர் உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் இயற்கை திருவிழா நடத்தப்படுகிறது. இதை முன்னிடு காலையில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெறுகிறது. இந்த தகவலை சமூக மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் பாஸ்கரன் , சமூக ஆர்வலர் முத்துராமன்ஆகியோர் நெல்லையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியின் போது,

* அல்வா சிட்டி மாரத்தன்: 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான விழிப்புணர்வு மினி மாரத்தான்.
* பட்டாம்பூச்சிகள் நடை ஓட்டம்: 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கானது.
* முதியோர் நடை ஓட்டம்: 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது.
* ராஜநடை: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நிகழ்வு.
* பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் மற்றும் கவிதை போட்டிகளும் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சில் பங்கேற்க முன்பதிவு செய்வது கட்டாயம். முன்பதிவு முற்றிலும் இலவசம். பங்கேற்பாளர்களுக்கு பனியன், பதக்கம், சான்றிதழ், மரக்கன்றுகள், துணிப்பை உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். நெல்லை சமூக மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை, டாடா பவர் சோலார் நிறுவனத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
முன்பதிவு செய்ய vetrinitchayam.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 5 ஆகும்.

பேட்டியின்போது சமூக ஆர்வலர்கள் அருணாச்சலம், செந்தூர் பாண்டி, முருகேசன் ஆகியோரும் உடனிருந்தனர்.