டேய் ஓடாதடா .... வலையை கண்டதும் விழுந்தடித்து ஓடிய நாய்கள்... பின்னலேயே ஓடிய நெல்லை மாநராட்சி ஊழியர்கள்

the-nellai-corporation-employees-ran-behind-dogs

திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், தலைமை தபால் நிலையம் மற்றும் அதற்கு எதிரே உள்ள காவல் நிலையத்திலும் நாய்கள் புகுந்து அட்டகாசம் செய்வதாகத் தொடர் புகார்கள் வந்தன.

பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதிகளில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறாக இருந்த இந்த நாய்கள், சமீபகாலமாக அரசு அலுவலகங்களுக்குள்ளும் புகுந்து அட்டகாசம் செய்யத் தொடங்கின. குறிப்பாக, தலைமை தபால் நிலையம் மற்றும் காவல் நிலையத்தில் நாய்கள் உள்ளே நுழைந்து இடையூறு செய்து வந்தன.

இதையடுத்து, இன்று (மே24) காலை நாய்களை பிடிக்க திருநெல்வேலி மாநகராட்சி ஊழியர்கள் வலைகளுடன் களமிறங்கினர். முதலில், பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியில் சுற்றித் திரிந்த நாய்களைப் பிடித்துக் கூண்டில் அடைத்தனர். பின்னர், தபால் நிலையம் மற்றும் காவல் நிலைய பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த தெருநாய்களைத் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பிடிபட்ட நாய்கள் கூண்டில் அடைக்கப்பட்டு கருத்தடை சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டன. தப்பி ஓடிய நாய்களை தீவிரமாக தேடி விருகின்றனர்.