
முக்கூடல் பகுதிகளில், ஆன்லைனில் பணம் செலுத்தியதாகக் கூறி கடைகளில் மோசடியாகப் பொருட்கள் வாங்கிய கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஒருவரைத் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியில் உள்ள ஜவுளிக்கடை, இறைச்சிக் கடை, ஓட்டல்களில் நான்கு பேர் கொண்ட கும்பல் அடுத்தடுத்துப் பொருட்களை வாங்கியுள்ளனர். அதற்கான பணத்தை ஜி பே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மூலம் செலுத்தியதாகக் கூறியுள்ளனர். ஆனால், கடை உரிமையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கைச் சரிபார்த்தபோது, அந்தக் கும்பல் மோசடி செய்தது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர்கள், முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், நாங்குநேரியைச் சேர்ந்த சுப்பையா (எ) சுபாஷ் (20), இசக்கிப்பாண்டி (19), பாப்பாக்குடி கருப்பசாமி (28), செல்வக்குமார் (26) ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, இசக்கிப்பாண்டி, கருப்பசாமி, செல்வக்குமார் ஆகிய மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுப்பையா (எ) சுபாஷைத் தேடி வருகின்றனர்.
இதேபோன்ற சம்பவங்கள் பாப்பாக்குடி, அம்பை, முன்னீர்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் ஜவுளிக்கடைகளில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.