கணினித் துறை, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தொடர்பான படிப்புகளின் மீதான ஆர்வம் மாணவர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவுக்கு உதவ நெல்லை அரசு பொறியியல் கல்லூரி ஒரு சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஒரு சிறப்பு உதவி மையம் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் தாங்களாகவோ அல்லது வெளியிலோ தவறாகப் பதிவு செய்துள்ளதாகச் சந்தேகித்தால், இந்த மையத்திற்கு வந்து சரி செய்துகொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் பொறியியல் படிப்புகளைப் படிக்க மாணவர்களிடையே ஆர்வம் மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, AI தொழில்நுட்பம் போன்ற நவீன பாடத்திட்டங்கள் மற்றும் கணினி தொடர்பான பாடங்கள் பயில மாணவர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். 2025-26 கல்வியாண்டிற்கான பொறியியல் விண்ணப்பப் பதிவு தற்போது நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் பொறியியல் கல்வி பயில்வதற்காக விண்ணப்பித்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய ஜூன் 6 ஆம் தேதி வரை அவகாசம் உள்ள நிலையில், பலர் இணையதளம் மூலமாகவும், தனியார் கணினி மையங்கள் மூலமாகவும் பதிவு செய்து வருகின்றனர். நெல்லை அரசு பொறியியல் கல்லூரி மற்றும் பழையபேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அரசு சார்பில் விண்ணப்பப் பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான மாணவ, மாணவிகள் வந்து, ஆசிரியர்களின் உதவியுடன் தங்கள் பொறியியல் கல்விக்கான விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், "இதுவரை எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பங்களைப் பதிவு செய்தவர்கள், ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த மையத்திற்கு வந்து திருத்திக்கொள்ளலாம். இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்களும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். . விருப்பம் உள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் வரவேண்டும். ஜூன் 7 ஆம் தேதிக்குள் அசல் சான்றுகள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் தரப்பில், "நவீன தொழில்நுட்பக் கல்விக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் எனக் கருதுகிறோம். இதனால் AI தொழில்நுட்பம் தொடர்பான பொறியியல் கல்வி, கணினி தொடர்பான பொறியியல் கல்வி போன்றவை சார்ந்த கல்வி பயில ஆர்வம் உள்ளது" என்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் புதிய தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் தொடங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாகப் பல இடங்களில் டைட்டில் பார்க் (TIDEL Park) தொடங்கப்பட்டுள்ளதால், வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அரசு வழங்கும் மாதாந்திர கல்வி உதவித்தொகையும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மாணவ, மாணவிகள் நம்பிக்கையுடன் மீண்டும் பொறியியல் கல்வி பயில ஆர்வம் காட்டுவதாகக் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.









.jpg)
