
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக கல்லிடைக்குறிச்சி கோட்டத்தின் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று ( மே27 )நடைபெற்றது. கூட்டத்தில் திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி கலந்துகொண்டு பொதுமக்கள் குறை தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி பேசினார். அப்போது, தற்பொழுது தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதால் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளை தீவிரமாக கண்காணித்து இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின் விநியோக கட்டமைப்பில் ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால் உடனுக்குடன் சீர் செய்து சீரான மின் விநியோகம் வழங்க உத்தரவிட்டார். தேவையான தளவாங்கள், மின்கம்பங்கள், பீங்கான்வட்டு, பீங்கான் மூள்சுருள், மின்கம்பிகள், போதிய அளவு கையிருப்பு வைக்கவும் அறிவுரை வழங்கினார். அனைத்து துணை மின் நிலையங்களில் கூடுதல் கண்காணிப்புடன் விழிப்புணர்வுடன் பணிகளை மேற்கொள்வதற்கும், உப மின் நிலைய மின் கட்டமைப்பில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் சீர் செய்யவும் உத்தரவிட்டார். பொதுமக்கள் மின் வாரிய உதவிக்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயலி மூலமாகவும், ( TNPDCL OFFICIAL APP ) தொடர்பு கொள்ளலாம். மேலும், திருநெல்வேலி மின் தடை நீக்கும் மைய தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034, மற்றும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையத்தையும் 94987 94987 தொடர்பு கொள்ளலாம்.