மழையால் தண்ணீர்பெருக்கு அதிகரிக்கும் தாமிரபரணி: 4 .5 பிளாஸ்டிக் உள்ளிட்ட 94 டன் கழிவுகள் அகற்றம்

rains-increase-waterlogging-in-tamirabarani-94-tons-of-waste-including-4-5-plastics-removed

திருநெல்வேலி மாவட்டத்தின் உயிர்நாடியான தாமிரபரணி ஆறு, சமீபத்தில் பெய்த மழையால் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், மறுபுறம் ஆற்றில் இருந்து 94 டன் பழைய துணிகள் உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாமிரபரணி ஆற்றில், குறிப்பாக பாபநாசம் பகுதியில், கோடைக்கால துார்வாரும் மற்றும் துாய்மைப் பணி கடந்த 7ஆம் தேதி துவங்கியது. விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிரிக்கெட் மூர்த்தி தலைமையில் 21 நாட்கள் நடைபெற்ற இத்துாய்மைப் பணியில், விக்கிரமசிங்கபுரம் ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டனர்.

இறுதி நாளில் நெல்லை மாவட்ட ஏரியா கமாண்டர் சுதன் உத்தரவின் பேரில் விக்கிரமசிங்கபுரம் ஊர்க்காவல் படை கம்பெனி கமாண்டர் ராமநாதன் தலைமையில் ஊர்க்காவல் படையினர் ஜோசப் சுப்பிரமணியன், பால்ராஜ், முத்துகுமார், பரமசிவன், செந்தில், முத்து பட்டன், பிச்சையா, சாலமோன் ஜெயராஜ், மகேஸ்வரி மற்றும் அரிப்புக்காரர்கள் ராமசாமி, செல்லதுரை, அய்யாத்துரை, அம்பை துரை, பருத்தி பால் சங்கர், துரை, மலை சுந்தரம் ஆகியோர் தீவிரமாக கழிவுகளை அகற்றினர்.

சுற்றுச்சூழல் ஆர்வலரும், புள்ளியியல் துறை முன்னாள் உதவி இயக்குநருமான கிரிக்கெட் மூர்த்தி தெரிவித்த தகவலின்படி, பாபநாசம் ஆற்றிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் மட்டும் கடந்த 21 நாட்களில் சுமார் 94 டன் பழைய துணிகள் அகற்றப்பட்டுள்ளன. இது தவிர, 3.5 டன் கற்சிலைகள், 23.5 டன் செடிகள், 4,540 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள், 1,720 கிலோ மண் கலையங்கள், 580 கிலோ செருப்புகள், 975 கிலோ போட்டோ மற்றும் கண்ணாடி பாட்டில்கள், 255 கிலோ நாப்கின் மற்றும் டைபர், 120 கிலோ தீபச்சட்டிகள், 95 கிலோ பாசிமாலைகள் மற்றும் சோப்பு, ஷாம்பு கவர்கள் என பல டன் அளவிலான கழிவுகள் தண்ணீரிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.

மக்களின் நம்பிக்கையின் பேரில் ஆற்றில் விடப்படும் துணிகள் மற்றும் பிற பூஜைப் பொருட்கள், நாளடைவில் கழிவுகளாக மாறி ஆற்றின் சுற்றுச்சூழலை பாதிக்கிறது. நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. மக்கள் கழிவுகளை ஆற்றில் கொட்டுவதைத் தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.