
சமூகரெங்கபுரத்தில்புதிய மீன்வள தொழில்நுட்பக் கல்லூரி அமையவுள்ள இடத்தை சபாநாயகர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் ரூபாய் 27.76 கோடி மதிப்பில் புதிய மீன்வள பல்தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சமூகரெங்கபுரத்தில் இந்த கல்லூரி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமூகரெங்கபுரத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் வளாகத்தில், மாணவர்களுக்கான வகுப்பறைகள், விடுதிகள் போன்ற பல கட்டிடங்கள் நல்ல நிலையில் உள்ளன. எனவே, இந்த கட்டடத்தை தற்காலிகமாக மீன்வள பல்தொழில்நுட்பக் கல்லூரியாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டிலேயே ஆசிரியர் பயிற்சி நிறுவனக் கட்டடத்தில் மீன்வள பல்தொழில்நுட்பக் கல்லூரியைத் தொடங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதோடு,இ=புதிய கட்டடம் கட்டுவதற்கு சம்மந்தப்பட்ட வல்லுநர்களைக் கொண்டு திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி விரைவில் ஒப்புதல் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. , ராதாபுரம் பகுதியில் மாணவர்களுக்கு கடல் சார் வேலை வாய்ப்பை இந்த கல்லூரி உருவாக்கும்.
இந்த ஆய்வின் போது மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜதுரை, ராதாபுரம் வட்டாட்சியர் மாரிசெல்வம், சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் அந்தோணி அருள், ஒன்றிய கவுன்சிலர் காந்திமதி, பாலன், மௌலின், அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி மற்றும் பலர் உடனிருந்தனர்.