
மேலப்பாளையம் மாட்டுச்சந்தை வளாகத்தில் செயல்பட்டு வரும் கருத்தடை மையத்தில் தெருநாய்களை பட்டினி போடூவதாக புகார் எழுந்துள்ளது.
நெல்லை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை செய்வதற்காக மேலப்பாளையம் மாட்டுச்சந்தை வளாகத்தில் தகர சீட்டுகளால் கொண்ட கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் ஒப்பந்த அடிப்படையில் தனியார் தொண்டு நிறுவனம் நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. தற்போது சுமார் 50 நாய்கள் இந்த மையத்தில் பராமரிக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த நாய்களுக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை காற்றோட்டம் இல்லாத கூடாரத்தில் அடைத்து வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக இந்திய சட்ட உரிமை மற்றும் ஊழல் தடுப்பு இயக்கத்தின் மாநில அமைப்பாளர் சாதிக் ராஜா கூறுகையில், "தெரு நாயாக இருந்தாலும் அதற்கு உயிர் இருக்கிறது, வலி இருக்கும். அதனை வதைக்கக் கூடாது. முறையாக கருத்தடை செய்து பராமரிக்க வேண்டும். நாங்கள் இந்த மையத்தைப் பார்வையிட்டபோது இரண்டு நாய்கள் இறந்து கிடந்தன. பார்க்கவே மிகவும் வேதனையாக இருந்தது. சுமார் 50 நாய்கள் அங்கு உள்ளன. ஆனால் சரிவர உணவு வைக்கப்படுவதில்லை. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு கருத்தடை செய்ய அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் தொண்டு நிறுவனங்களையோ அல்லது ஒப்பந்ததாரர்களையோ நம்பக் கூடாது. மாநகராட்சி உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடியோ வைரலானதை தொடர்ந்து, மாநகர சுகாதார அலுவலர் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள 20 நாய்களை விடுவித்தனர். மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்தினர்.
எப்படியோ அடைபட்டு கிடந்த நாய்களுக்கு விடுதலை கிடைத்தது...