
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில், வணிக வளாகங்கள் நிறைவுச் சான்றிதழ் பெறாமலேயே பலமுறை தற்காலிக மின் இணைப்புகள் பெற்று செயல்பட்டு வருவதால், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது
பொதுவாக, ஒரு வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அனைத்து பாதுகாப்பு மற்றும் கட்டுமான விதிமுறைகளுக்கு இணங்க உள்ளாட்சி அமைப்பிடமிருந்து 'நிறைவுச் சான்றிதழ்' (Completion Certificate) பெறுவது கட்டாயமாகும். இந்தச் சான்றிதழ் கிடைத்த பின்னரே நிரந்தர மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், திருநெல்வேலியில் உள்ள பல வணிக வளாகங்கள் நிறைவுச் சான்றிதழ் பெறாமலேயே, தற்காலிக மின் இணைப்புகளை மீண்டும் மீண்டும் புதுப்பித்து மின் இணைப்புகளை பெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இதுபோன்ற தற்காலிக இணைப்புகள், நிரந்தர இணைப்புகளுக்கான உயர் கட்டண விகிதங்களில் இருந்து விலக்கு பெறுகின்றன. வரிவிதிப்புகளைத் தவிர்ப்பதற்கும் வழிவகுப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் மின்வாரியத்திற்குப் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்படாத அல்லது பாதுகாப்பற்ற கட்டுமானங்கள் தற்காலிக இணைப்புகளுடன் செயல்படுவது, மின்சார பாதுகாப்பு விதிமீறல்களுக்கும், சில சமயங்களில் சுற்றுச்சூழல் விதிமீறல்களுக்கும் வழிவகுப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த முறைகேடு குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும், உரிய ஆவணங்களுடன் மின்வாரிய உயரதிகாரிகளுக்குப் புகார்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், இந்தப் புகார்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது மின்வாரிய அதிகாரிகள் அலட்சியப்போக்கைக் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகக் தலையிட்டு, நிறைவுச் சான்றிதழ் பெறாத வணிக வளாகங்களின் தற்காலிக மின் இணைப்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி கூறுகையில், இதுகுறித்து ஏற்கனவே தனக்கு தகவல் வந்ததாகவும் தனி குழு நியமித்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.