
திருநெல்வேலி டவுன் மாநகரப் பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், விபத்தில் சிக்கிய பெண்ணை மருத்துவமனையில் சேர்க்கவே மக்கள் பெரும்போராட்டம் நடத்தும் நிலை உருவாகியுள்ளது.
நிகழ்வின் விவரம்:
சீதபற்பநல்லூரைச் சேர்ந்த பொற்கொடி என்ற பெண், தச்சநல்லூர் அடுத்துள்ள ராமயன் பட்டியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் வெள்ளை நிறம் பூசப்படாத வேகத்தடை உள்ளது. இதை பார்க்காத பொற்கொடி வேகமாக சென்றுள்ளார். இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி தரையில் தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார்.
இதை பார்த்த தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொற்கொடிக்கு முதல் உதவி சிகிச்சை செய்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸை தொலைபேசியில் அழைத்தபோது, திருநெல்வேலி டவுன் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் இல்லை என்று பதில் வந்துள்ளது. பாளையங்கோட்டையில் இருந்துதான் ஆம்புலன்ஸ் வர வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு சிறிது கால தாமதம் ஏற்பட்டது.
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை:
லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் திருநெல்வேலி மாநகர டவுன் பகுதிக்கு தனி 108 ஆம்புலன்ஸ் இல்லாதது குறித்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். "வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசாமல் இருந்ததுதான் விபத்துக்கு காரணமென்று கூறப்படுகிறது.
மணிகண்டன் என்பவரின் மனைவியான பொற்கொடி, இல்லம் தேடி கல்வி இயக்கத்தில் தன்னார்வலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவர், 6 மணி நேரத்திற்கும் மேலாக மயக்க நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் காரணமாக திருநெல்வேலி டவுன் பகுதிக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்த வேண்டுமென்பதையே எடுத்து காட்டுகிறது.