தமிழ்நாடு குடிநீர் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பள பணத்தில் மோசடி?

tamil-nadu-water-supply-board-contract-workers-salary-fraud-shocking

திருநெல்வேலி: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களின் சம்பள பணத்தை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டு சேர்ந்து, மாதந்தோறும் சுமார் 7.42 கோடி ரூபாயை மோசடி செய்வதாக புகார் தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி-தென்காசி பாரதிய தமிழ்நாடு குடிநீர் வாரிய வாரிய ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சமீபத்தில் தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது

'2022 ஆம் ஆண்டு வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் தட்சிணாமூர்த்தி தொழிலாளர்களிடம் பகிர்ந்து கொண்ட தகவலின்படி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கூட்டு குடிநீர் வழங்கல் திட்டங்களில் (CWSS) 11,597 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,401 ஊதியமாக வழங்கப்பட வேண்டும். ஆனால், மின்சாரப் பணியாளர்கள், பம்ப் ஆப்பரேட்டர்கள் மற்றும் பராமரிப்பு உதவியாளர்களாகப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.7,500 முதல் ரூ.9,800 வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"எங்கள் ஊதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை. மாறாக சட்டவிரோதமாகக் குறைக்கப்பட்ட ஊதியம் ரசீதும் இல்லாமல் பணமாக வழங்கப்படுகிறது. இது வாரிய விதிகளுக்கு எதிரானது. அதே நேரத்தில், மாவட்ட அளவிலான நிர்வாகப் பொறியாளர்களின் (EEs) உதவியுடன் அதிகாரபூர்வ பதிவுகளில் அதிக ஊதியம் காட்டப்படுகிறது. அதிகாரிகள் -ஒப்பந்ததாரர்கள் கூட்டணி போட்டு கொண்டு எங்கள் ஊதியத்தில் இருந்து மாதந்தோறும் ரூ.7.42 கோடியை மோசடி செய்கிறார்கள். ஒவ்வொரு மூன்று வருட ஒப்பந்தக் காலத்திலும் ரூ.267 கோடி மோசடி செய்யப்படுகிறது.'

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் கே.என். நேரு, இது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் விசாரிப்பதாகக் உறுதியளித்துள்ளார். 15 முதல் 20 வருடங்களாக ஒப்பந்த ஊழியர்களாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை முழுமையாக வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.