பாளையங்கோட்டை : முத்தூர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சியளித்த கலெக்டர்

palayamkottai-collector-surprises-children-at-muthur-anganwadi-center

பாளையங்கோட்டை அருகே உள்ள முத்தூரில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில், புதிதாகச் சேர்க்கப்பட்ட குழந்தைகளை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சுகுமார் கலந்துகொண்டு, குழந்தைகளுக்குப் பூங்கொத்து அளித்து வரவேற்றார்.

புதியதாக அங்கன்வாடி மையத்தில் சேர்ந்த குழந்தைகளுக்குச் சீருடைகள், புத்தகங்கள், இலவச கல்வி உபகரணப் பொருட்களைக் கலெக்டர் சுகுமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் சுகுமார், திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 1261 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பாளையங்கோட்டை வட்டாரத்தில் மட்டும் 141 குழந்தைகள் மையங்கள் உள்ளன. மேலும், மாவட்டத்தில் 23,433-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திலும் குழந்தைகளின் எடை மற்றும் உயரம் மாதந்தோறும் பரிசோதனை செய்யப்படுகிறது. அனைத்துக் குழந்தைகளுக்கும் இணை உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்குச் செறிவூட்டப்பட்ட பிஸ்கட்கள் மற்றும் ஊட்டச்சத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தை ஊட்டச்சத்து குறைபாடுகள் இல்லாத மாவட்டமாக உருவாக்க, சுகாதாரத் துறையும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறையும் இணைந்து செயல்படுகின்றன.

இந்த நிகழ்ச்சியில் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெனிபா, புள்ளியியல் ஆய்வாளர் சம்சுதீன், வட்டார வளர்ச்சி அலுவலர் நெல்லையப்பன், ஊராட்சி மன்றத் தலைவர் சுடலை கண்ணு மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.