
திருநெல்வேலி மாநகரில், வாகனங்கள் கண்ட இடங்களில் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக மாலை நேரங்களில், பெருமாள்புரம், என்ஜிஓ காலனி, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், முருகன்குறிச்சி, குலவணிகர்புரம், திருவனந்தபுரம் சாலை போன்ற முக்கிய பகுதிகளில் கண்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இதனால் பொதுமக்கள் சாலைகளில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். விபத்து அபாயமும் ஏற்படுகிறது. வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு போதிய வாகன நிறுத்த வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில்லை. கடைகளுக்கு முன்பாக சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதும் இந்த நெரிசலுக்கு முக்கிய காரணம். இதனால், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே சாலைகளில் நடப்பதற்கே சிரமப்படுகின்றனர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், குறிப்பாக மாலை நேரங்களில், சிறப்பு போக்குவரத்து காவலர்களை நியமித்து, சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முக்கிய இடங்களில் கண்ட இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களையும் ஒழுங்குபடுத்தினால், போக்குவரத்து சீராகும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.
நெல்லை மாநகர காவல்துறை கமிஷனர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, போக்குவரத்தை சீர்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.