கருத்தடைக்கு பிடித்து வந்த நாய்களுக்கு நடந்த சோகம் நெல்லையில் தனியார் தொண்டு நிறுவனம் மீது வழக்குப்பதிவு

tirunelveli-a-dog-costs-rs-1-600-to-be-sterilized-jeevakarunya-starves-it-to-death

திருநெல்வேலி மாநகராட்சியில் சுற்றித் திரியும் நாய்களுக்கு கருத்தடை செய்வதற்காக மாநகராட்சி நிர்வாகம் நாகர்கோவிலைச் சேர்ந்த ஜீவகாருண்யா என்ற தனியார் தொண்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதற்காக மேலப்பாளையம் மாட்டுச்சந்தை அருகே தகர கொட்டகையில் கருத்தடை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை 20க்கும் மேற்பட்ட நாய்கள் அந்த கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்தன. இந்த நாய்களுக்கு குடிநீர் உணவு கொடுக்காமல் காற்று கூட புகாத இடத்தில் போட்டு பட்டினி போட்டுள்ளனர். இதனால், இரண்டு ஆண் நாய்கள் இறந்து விட்டன. மக்கள் புகாரின் பேரில் மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர். ராணி சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், டாக்டர் ராணியின் உத்தரவின் பேரில், நாய்கள் விடுவிக்கப்பட்டன. இறந்த இரு நாய்களும் போஸ்ட்மார்ட்டத்துக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டன. நாய் ஒன்றுக்கு கருத்தடை செய்ய ஜீவகாருண்யா தொண்டு நிறுவனத்துக்கு ரூ. 1,600 மாநகராட்சியால் வழங்கப்படுகிறது. எனினும், அந்த நாய்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் முறையாக பராமரிக்கவில்லை. இதைத் தொடர்ந்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து , நாகர்கோவில் ஜீவகாருண்யா தொண்டு நிறுவன உரிமையாளர் ஷோபா உள்ளிட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.