திருநெல்வேலியில் மூலிகை முன்றில் : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட அறிவியல் மையத்தின் புதிய முயற்சி!

herbs-in-front-in-tirunelveli-district-science-center-world-environment-day

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் புதிய முயற்சியை எடுத்துள்ளளது. இன்று( ஜூன் 5, )'மூலிகை முன்றில்' என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சி மாவட்ட அறிவியல் மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த 'மூலிகை முன்றில்' நிகழ்ச்சி ஒரு தொடர் முயற்சியாகும். இனி ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில், இந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில், திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் ராஜேஷ் குறிப்பிட்ட மூலிகையின் மருத்துவக் குணங்கள் மற்றும் அதை முறையாகப் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைப்பார். இது பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் மூலிகைகளின் நன்மைகளைப் புரிந்துகொண்டு பயன்படுத்த உதவும்.

தொடக்க நாளான இன்று காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை மாவட்ட அறிவியல் மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வயது வரம்பு இல்லை. மூலிகைகள் மற்றும் இயற்கை மருத்துவம் குறித்து அறிந்துகொள்ள ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும், மூலிகைக் கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. அவற்றை வீடுகளில் மூலிகைகளை வளர்த்துக் கொள்ளலாம். மக்கள் இயற்கையோடு ஒன்றி வாழ இது வழி வகுக்கும்.

இத்தகைய நல்ல முயற்சியை திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், ஏட்ரீ (ATREE) தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. 'மூலிகை முன்றில்' நிகழ்ச்சி, திருநெல்வேலி மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், இயற்கையோடு இணக்கமான ஒரு வாழ்க்கையை வாழ ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.