
இறைத்தூதர் இப்ராஹிம் தனது வாழ்வில் செய்த தியாகங்களை நினைவூட்டும் வகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நெல்லை மேலப்பாளையம் மாநகராட்சி ஈத்கா திடலில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் கலந்து கொண்டனர். அதிகாலையிலேயே புத்தாடைகள் அணிந்து உறவினர்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
தொழுகையில் மாநில மேலாண்மை குழு தலைவர் மல்லவி எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி கலந்து கொண்டு பெருநாள் சிறப்புரை ஆற்றினார். அப்போது, 'இறைத்தூதர் இப்ராஹிம் செய்த தியாகங்களை நினைவூட்டும் வகையில் இறைவனுக்காக தியாகம் செய்யப்படும் விலங்குகளின் இறைச்சி ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் தாங்கள் வாழும் சமூகத்தினுடைய நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் தங்களுடைய பொருளால் உடல் உழைப்பால் இயன்ற தியாகங்களை செய்ய வேண்டும். பாலஸ்தீனத்தில் இன்றுவரை கொல்லப்பட்டு கொண்டிருக்கும் அப்பாவி மக்களின் மறுவாழ்வுக்காக பிராத்திக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
சிறப்பு தொழுகை முடிந்ததும் ஆடு, மாடுகளை வெட்டி ஏழைகளுக்கு இறைச்சி அளிக்கப்பட்டது.