அம்பையில் உதவி செய்வது போல் நடித்து 17 சவரன் நகை திருட்டு மூதாட்டி வீட்டில் கைவரிசை காட்டிய இளைஞர் கைது

17-sovereigns-of-jewellery-stolen-while-pretending-to-help-in-Ambai

அம்பாசமுத்திரம் அருகே, உதவி செய்வது போல் நடித்து ஓய்வு பெற்ற செவிலி வீட்டில் 17 பவுன் நகைகளைத் திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

அம்பாசமுத்திரம் சந்தை மடம் தெருவில் வசித்து வருபவர் ஜெய மரிய பாக்கியம் (82). அரசு மருத்துவமனையில் செவிலியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே சலூன் கடை நடத்தி வரும் ஜாமியா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த குமார் (37) என்பவர், மூதாட்டிக்குத் தேவையான சிறு சிறு உதவிகளைச் செய்து, அவரது நம்பிக்கையைப் பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (ஜூன்.08) காலை ஜெய மரிய பாக்கியம் தனது பீரோவில் வைத்திருந்த 17 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், காவல் ஆய்வாளர் சண்முகவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையில், மூதாட்டிக்கு உதவியாக இருந்து வந்த குமார் தான், இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் குமாரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் ₹6.70 லட்சம் மதிப்பிலான 17 சவரன் நகைகளும் மீட்கப்பட்டன. மூதாட்டியை நம்ப வைத்து இளைஞர் துரோகம் செய்த சம்பவம் அம்பாசமுத்திரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.