நெல்லையில் தடுக்கப்பட்ட இரு கொலைகள் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் போலீசாருக்கு ரொக்க பரிசு!

two-murders-prevented-in-nellai-cash-reward-for-adgp-david-devasirwatham-police

நெல்லை போலீசார் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். ஜாமீனில் உள்ள ரவுடிகள், அவர்களது கூட்டாளிகளையும் நெல்லை மாவட்ட தனிப்பிரிவு போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில், நெல்லை, தாலூகா காவல் நிலைய எல்லையிலும், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லையிலும் கொலை செய்ய மர்ம நபர்கள் சதித்திட்டம் தீட்டி வருவதை தனிப்பிரிவு போலீசார் முன்கூட்டியே அறிந்தனர். இந்த சதித்திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டது.

இதனால் கல்லிடைக்குறிச்சி மற்றும் தாலூகா போலீசார் நேற்று முன்தினம் உச்சக்கட்ட கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் நெல்லை மாவட்டத்தில் நடக்கவிருந்த 2 கொலை சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, தமிழக காவல்துறை ஏடிஜிபி (சட்டம் ஒழுங்கு) டேவிட்சன் தேவாசிர்வாதம் சம்பந்தப்பட்ட போலீசார் 19 பேருக்கு வெகுமதி வழங்கியுள்ளார்.

இதை முன்னிட்டு, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், தாலூகா இன்ஸ்பெக்டர் சசிகுமார், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் கலா, தனிப்பிரிவு எஸ்ஐக்கள் சுதன், செல்வராஜ், கார்த்திக், தலைமை காவலர்கள் ஆனந்தராஜ், அழகு, அருள் ஜெபநாதன், சக்திவேல், முதல் நிலை காவலர்கள் சுடலைமுத்து, பாலகுமார், ராஜா, ரெங்கநாத் ராஜா, உமர் தீன், இரண்டாம் நிலை காவலர்கள் இஸ்மாயில் அபூபக்கர், நந்தகுமார், ரெனிஷ் சாமுவேல், சுடலை சுரேஷ் ஆகிய 19 பேருக்கு இன்று (ஜூன் 9) நெல்லை எஸ்பி அலுவகத்தில் பாராட்டு விழா நடந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி சிலம்பரசன் கலந்து கொண்டு சம்பந்தப்பட்ட போலீசாரை நேரில் அழைத்து, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் வழங்கிய ரொக்க பரிசை வழங்கி பாராட்டினார்.