ராதாபுரம், வள்ளியூர் , நாங்குநேரி மக்களுக்கு நல்ல செய்தி... விரைவில் 96 ஆயிரம் வீடுகளுக்கு தாமிரபரணி தண்ணீர்

Good-news-Radhapuram-Valliyur-and-Nanguneri-houses-Thamirabarani-water

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தலைமையில் மாவட்ட ஆட்சியர் சுகுமார், மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியதாவது,

ராதாபுரம், வள்ளியூர் , நாங்குநேரி உள்ளிட்ட 6 ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கும் 96 ஆயிரம் குடியிருப்புகளுக்கும் மூலக்கரைப்பட்டி, ஏர்வாடி திருக்குறுங்குடி உள்ளிட்ட ஏழு பேரூராட்சிகள் களக்காடு நகராட்சி போன்றவைகளுக்கு நெல்லை மாவட்டம் மேல முன்னீர்பள்ளம் பகுதியில் தாமிரபரணி நதியில் உந்துதல் நிலையம் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர் .

இந்த திட்டம் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் நிறைவு பெற்றுவிடும். பணி நிறைவடைந்தைதுமும் 96 ஆயிரம் குடியிருப்புகளுக்கு தண்ணீர் வழங்கப்படும் . களக்காடு நகராட்சி உள்ளிட்ட ஏழு பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் அக்டோபர் மாத இறுதிக்குள் நிறைவு பெற்று 48 ஆயிரம் குடியிருப்புகளுக்கு தாமிரபரணி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்கள் படிக்கும் வகையில் 25 சதவீதம் மாணவர்களுக்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை வாங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தில் 50 சதவீத நிதி மத்திய அரசும் 50 சதவீதம் நிதி மாநில அரசும் வழங்க வேண்டும் ஆனால் அந்த நிதியை இதுவரை மத்திய அரசு வழங்கவில்லை. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ. 2,190 கோடி நிதியை வழங்கவில்லை.

இந்த சூழலில் அந்த நிதியை கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்கிறார். தமிழகத்துக்க தர வேண்டிய நிதியை தர மறுத்துவிட்டு இங்கு ஏன் வந்தீர்கள் என்று யாரும் கேட்கவில்லை. பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் பிற மத்திய அமைச்சர்கள் யாரும் பத்திரிகையாளரை சந்தித்து பேசுவதும் இல்லை . மக்களுக்கு நல்லது செய்தால்தானே பத்திரிகையாளர்களை சந்திப்பார்கள்' என்றார்.