கொள்முதல் செய்த நெல்லுக்குப் பணம் வரவில்லை: அம்பாசமுத்திரத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகளுடன் கடும் வாக்குவாதம்

No-payment-for-purchased-paddy-Heated-argument-with-farmers-ambasamudram

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (DPCs) நெல்லை விற்ற விவசாயிகளுக்கு, 50 நாட்களுக்கும் மேலாகியும் பணம் இன்னும் வழங்கப்படவில்லை.

நெல்லைக் கொடுத்தும் பணம் கிடைக்காததால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள விவசாயிகள், உரிய விலையை உடனே வழங்க வேண்டும் எனப் பலமுறை வலியுறுத்தியும் பயனளிக்காததால், இன்று( ஜூன் 9)போராட்டத்தில் குதித்தனர். விவசாயிகள் ஏராளமானோர், வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

விவசாயிகள் கூறுகையில் "அடுத்த காரிப் சாகுபடிக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையில், இதுவரை பணம் கிடைக்கவில்லை. இதனால், நாங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். நகைகளை அடமானம் வைத்துள்ளோம். அடுத்த கட்ட விவசாயப் பணிகள் செய்ய முடியவில்லை. என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள், விவசாயிகளின் நெல்லைப் பெற்றுக்கொண்டு பணத்தைச் செலுத்த காலதாமதம் செய்வதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாகப் பணத்தைச் செலுத்தி, விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.