
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பினர், இன்று ( ஜூன் 9) மாவட்ட ஆட்சியரிடம் ஒரு பரபரப்பான மனுவை அளித்துள்ளனர். அந்த மனுவில், சமூக நல்லிணக்கத்தைக் குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடன் செயல்படும் வழக்கறிஞர் ராமசுப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர்.
சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பின் அங்கமாக செயல்படும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான அப்துல் ஜப்பார் மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடத்தில் அளித்துள்ளார். அதில், கூறியிருப்பதாவது, 'கடந்த மே 24 ம் தேதி வழக்கறிஞர் ராமசுப்பு வாட்ஸ்அப் மூலம் என்னை திட்டி அசிங்கமாகவும், ஆபாசமாகவும் மெசேஜ் அனுப்பினார். இஸ்லாம் மதம் மற்றும் நபிகள் நாயகம் குறித்தும் இழிவாகப் பேசியுள்ளார். கொலை மிரட்டலும் விடுத்துள்ளார் . இது தொடர்பாக நான் அளித்த புகாரின் பேரில், மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ராமசுப்பு மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது ' தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு நபர் மீது வழக்கு நிலுவையில் இருந்தால், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், அரசு வேலை போன்றவை மறுக்கப்படும் நிலையில், 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் ராமசுப்புக்கு மத்திய அரசு வழக்கறிஞர் பதவி வழங்கப்பட்டது எப்படி? என்கிற கேள்வியை சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பினர் எழுப்பியுள்ளனர். அவரது பணி ஆணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், ராமசுப்பு துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமம் வேண்டி விண்ணப்பித்துள்ளதை அறிந்துள்ளோம். தொடர்ந்து மத வேறுபாட்டுடன் செயல்பட்டு வரும் அவரிடம் துப்பாக்கி இருந்தால் வேற்று மதத்தை சேர்ந்த மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் . எனவே, மாவட்ட ஆட்சியர், ராமசுப்புக்கு வழங்கப்பட்டுள்ள மத்திய அரசு வழக்கறிஞர் பொறுப்பை ரத்து செய்ய மத்திய அரசிடம் பரிந்துரை செய்ய வேண்டும் . அவருக்குத் துப்பாக்கி உரிமம் வழங்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.