கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்குவதில் புதிய நடைமுறையால் சிக்கல்: நெல்லையில் ஊழியர்கள் திணறல்!

New-procedure-causes-problems-in-providing-nutritional-food-to-pregnant-women

நெல்லை மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாவு, முட்டை உள்ளிட்ட பொருட்களை பெற அங்கன்வாடி மையங்களில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய நடைமுறையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அங்கன்வாடிகள் மூலம் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மாவும், 6 மாதம் முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு சத்து மாவும், ஒரு வயது முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு முட்டையும் வழங்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஏராளமான குழந்தைகளுக்கு இந்தச் சேவையால் பயன் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசு ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, ஊட்டச்சத்துப் பொருட்களைப் பெறுபவர்களின் விவரங்களை, குறிப்பாகக் கர்ப்பிணிகளின் கைரேகை மற்றும் கருவிழிப் பதிவுகளை 'போர்ஷன் டிராக்கர்ஸ்' (Poshan Trackers) என்ற செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும், ஒவ்வொரு முறையும் சத்து மாவு உள்ளிட்ட பொருட்களை வழங்கும்போது, அவர்களின் செல்போன்களுக்கு வரும் ஓ.டி.பி (OTP) எண்ணை உறுதி செய்த பிறகே பொருட்களை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை அங்கன்வாடி ஊழியர்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. பல இடங்களில் இந்தச் செயலி சரியாக வேலை செய்வதில்லை . ஊழியர்கள் செல்லும் கிராமப்புறப் பகுதிகளில் இணையதள சேவை சரியாகக் கிடைப்பதில்லை. இதனால், ஒரே இடத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பொருட்களை முழுமையாக விநியோகிக்க முடியாமல் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.

இது குறித்து ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். "அரசு சார்பில் வழங்கப்படும் ஊட்டச்சத்துப் பொருட்கள் சரியான நபர்களைச் சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்வதற்காகவே இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. செயலி மூலமாகத் தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்தச் செயலியில் சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. விரைவில் அதைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்கின்றனர்.