
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கள்மங்கலம் அருகேயுள்ள ஆத்தங்கல் விளையை சேர்ந்தவர் நாராயணன்(வயது 56). இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இவர் தனது குடும்பத்தினருடன் நேற்றுஉவரி சுயம்புலிங்கசுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். தொடர்ந்து, கோவிலில் தங்கும் அறையில் தங்கிருந்தனர். அறையில் இருந்து வெளியே சென்ற நாராயணன் மீண்டும் திரும்பி வரவில்லை.
நாராயணன் செல்போனுக்கு அவரது மகள் போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனிடையே கோவில் தெப்பகுளத்தில் முதியவர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார் என்று தகவல் வரவே எல்லோரும் ஓடிச்சென்று அங்கு போய் பார்த்தனர்.
அப்போது, நீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்தது நாராயணன் என்பது தெரிய வந்தது. அவரது சடலத்தை கண்டு மனைவியும், மகளும் கதறி அழுதனர். தகவல் அறிந்து உவரி போலீசார் அங்கு சென்று நாராயணன் உடலை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.