
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே ஆலடியூர் கீழத்தெருவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆலடியூர் கீழத்தெருவைச் சேர்ந்த விவசாயி குமார் (45) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நிதீஷ்குமார் (21) என்பவருக்கும் இடையே பைக் வேகமாக ஓட்டியது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம், நிதிஷ்குமார் தனது நண்பர்களான பிரகாஷ் மற்றும் ரவிக்குமார் ஆகிய மூன்று பேரும் ஒரே பைக்கில் வேகமாக மின்னல்வேகத்தில் சென்றுள்ளனர். இதைப் பார்த்த குமார், லட்சுமி, ஆறுமுகம் ஆகியோர் இவர்களைத் தட்டிக் கேட்டுள்ளனர்.
இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இந்த மோதலில், நிதிஷ்குமார், பிரகாஷ், ரவிக்குமார், சேர்ந்து கொண்டு, லட்சுமி, ஆறுமுகம், மற்றும் குமார் ஆகியோரைத் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, நிதீஷ்குமார், ரவிக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான பிரகாஷை போலீசார் தேடி வருகின்றனர்.