
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பாராளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்யானந்தன் நிதியிலிருந்து சுமார் 14.5 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட நவீன குளிரூட்டும் பேருந்து நிலையம் 2023ம் ஆண்டு திறக்கப்பட்டது. நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட இந்த நிழற்குடை, இரவு நேரங்களில் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியது.இந்த நிலையில், இந்த நிழற்குடையில் பொருத்தப்பட்டிருந்த ஏசி இயந்திரம், இருக்கைகள் திருடு போய் விட்டன. இது குறித்த வீடியோ வைரலான நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் இன்று (ஜூன்10) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மேயர் ராமகிருஷ்ணன், கொக்கிரகுளம் பேருந்து நிறுத்தத்தில் உடனடியாக இருக்கைகள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்படும் பொது சொத்துக்களை திருடுபவர்கள் மீது கடும் நடடிவடிக்கை எடுக்கப்படும். தாமிரபரணி நதிக்கரையை அழகுபடுத்தும் திட்டம் 90% நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.