
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (TVMCH) தேசிய சுகாதார இயக்கம் (NHM), அப்பல்லோ மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆரம்பகால நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை மையம் (DEIC - RBSK) ஆகியவை இணைந்து 6வது சிறப்பு இதய சிகிச்சை முகாமை நேற்று நடத்தின.
இந்த முகாமில், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த 120 குழந்தைகள் கலந்துகொண்டு இதய பரிசோதனை செய்தனர். இதில் 27 குழந்தைகளுக்கு பிறவியிலேயே இதயத்தில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரு குழந்தைகளுக்கு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தலா ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான 'டிவைஸ் க்ளோஷர்' என்ற நவீன சிகிச்சை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கத் லேபிலேயே வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை பெற்ற இரண்டு குழந்தைகளின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும், அவர்கள் நலமுடன் தேறி வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.